இயற்கை சூழலில் உள்ளதும், மனிதனாலும் ஏனைய உயிரினங்களாலும் பயன்படுத்தக்கூடியதுமான பொருட்கள், சக்திகள் அனைத்தும் “வளங்கள்” எனப்படும். வளங்களில் சக்தி வளங்கள் முக்கிய வளங்களாகும்.
சக்தி வளங்களின் முக்கியத்துவம் :
“நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். உண்மைதான். நீரும் ஓர் சக்தி வளங்களில் ஒன்றே! என்றாலும், இக்காலத்திற்கு ஏற்றவாறு “சக்தி வளங்கள் இன்றி அமையாது உலகு” எனக் கூறினால் மிகையாகாது. ஏனென்றால் சக்தி வளங்கள் இல்லையெனில் உலகில் உயிர் வாழ்க்கை நிச்சயமற்றதாகி விடும். தற்கால உலக இயக்கம் சக்தி வளங்களிலே தங்கியுள்ளது. இன்றைய உலகில் சக்தி வளங்களின் தேவை இன்றியமையாதவை. உலகின் பல்வேறு தொழிற்பாடுகளும் சக்தி வளங்களை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கின்றன. பொருளாதார, சமூக அபிவிருத்தி, விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றிற்கு சக்தி வளங்கள் பிரதான பங்காற்றியுள்ளது.
சக்தி வளங்களின் முக்கியத்துவம் பற்றி “Man and environment”
என்ற ஆங்கில மொழிப்புத்தகத்தில் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது. “Without energy
source human society cannot exit and develop in the manner in which we
live and develop today”. உலகின் உயிரினங்களின் நிலைத்திருப்பிற்கு சக்தி வளங்கள் மிக முக்கியம் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
சக்தி வளங்களின் வகைகள் :
சக்தி வளங்களின் வகை மற்றும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு சக்தி வளங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. புதுப்பிக்கக் கூடியது
2. புதுப்பிக்க முடியாதது
1.புதுப்பிக்கக் கூடியது :
பூமியில் மனிதன் நிலைத்திருக்கும் காலம் வரை அழியாமல் நிரந்தரமாக இருப்பவை மற்றும் மனிதனுக்கு இலகுவாக கிடைக்கக்கூடியதும், இயற்கை செயன்முறை மூலம் புதுப்பிக்கக் கூடியதுமான வளங்கள் இவ்வகையைச் சார்ந்தவையாகும். நேரடி சூரிய சக்தி, காற்றுச் சக்தி, நீர்வலு, அலைச்சக்தி, புவி வெப்ப சக்தி, உயிர்திணிவு சக்தி என்பன இதில் உள்ளடங்கும்.
2.புதுப்பிக்க முடியாதது :
புவியில் ஒரு எல்லைக்குட்பட்டு காணப்படக்கூடிய வளங்கள், மனித பயன்பாடு காரணமாக அருகி வருகின்றன. இவ்வளங்களை புதுப்பிக்க முடிவதில்லை. அத்தோடு இவ்வகையான வளங்கள் உருவாக பல மில்லியன் ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இவ்வளங்களை மனிதர்களால் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியாததோடு, இவற்றைப் பெற அதிக செலவும் ஏற்படுகின்றது. இத்தகைய தன்மையுடைய வளங்கள் இவ்வகையில் அடங்கும். நிலக்கரி, எண்ணெய், இயற்கை வாயு, சுவட்டு எரிபொருள், அணுசக்தி (யுரேனியம், தோரியம்) என்பன இவற்றிற்கு உதாரணங்களாகும்.
சக்தி வளங்களின் பரம்பல் :
அதிகரித்த சனத்தொகை, பொருளாதார நடவடிக்கைகளின் விருத்தி போன்ற காரணிகளால் சக்தி வளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. முக்கியமாக புதுப்பிக்க முடியாத சக்தி வளங்களின் பாவனை அதிகரித்துள்ளதால் அருகிப்போயுள்ள இவ்வகை வளங்கள் அழிந்து விடும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளங்களின் பரம்பல் உலகில் எவ்வாறு காணப்படுகிறது என்பதில் அவதானம் செலுத்துவோம்.
நிலக்கரி :
உயிர்ச்சுவட்டு எரிபொருளில் நிலக்கரி முக்கிய இடம் பெறுகிறது. கைத்தொழில் புரட்சிக்கு முன் நிலக்கரி முக்கிய எரிபொருளாக விளங்கியது. கைத்தொழில் புரட்சிக்கு இதுவே அத்திவாரம்!!! நிலக்காரி, மனிதனால் மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வளமாகும். பல மில்லியன் ஆண்டுகளாக சிதைவடைந்து புதைந்த தாவரங்கள் மூலம் நிலக்கரி உருவாகியுள்ளது. நிலக்கரியானது, எரியக்கூடிய திண்மப் பதார்த்தமாக காணப்படுகின்றது.
நிலக்கரியின் பரம்பல் :
உலகில் சமனற்ற நிலையில் பரவிக் காணப்படும் நிலக்கரிப்படிவுகள், உலகின் சில பிரதேசங்களில் அதிகமாக காணப்படும். இன்னும் சில பிரதேசங்களில் காணப்படுவதில்லை.
நிலக்கரிப்பரம்பல் அதிகம் காணப்படும் பிரதேசமாக ஐக்கிய அமெரிக்கா திகழ்கிறது. ஐக்கிய அமெரிக்காவில்; பென்சில்வேனியா, அப்பலாச்சியன் நிலக்கரிவயல், உள்நாட்டு வயல்கள், ரொக்கி மலைப்பிரதேசம், விரிகுடா வயல்களில் அதிக நிலக்கரிப்படிவுகளைக் காணலாம்.
இதற்கு அடுத்து உலகில் இரண்டாவதாக நிலக்கரிப்படிவுகள் பரவிக் காணப்படுவது ரஷ்யாவில் ஆகும். ரஷ்யாவில்; மொஸ்கோ, டொன்பாஸ், பூரல், குஸ்பாஸ், கரகண்டா ஆகிய நிலக்கரி வயல்களில் படிவுகள் நிரம்பியுள்ளன.
பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் நிலக்கரிப்படிவுகளும் முக்கிய இடம்பெறுகின்றன.
இந்நாடுகளைத் தவிர்த்து நிலக்கரிப் படிவுகள் காணப்படும் ஏனைய நாடுஎளாக; மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், போலாந்து என்பனவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், கனடா, ஜப்பான், அவுஸ்த்ரேலியா, நியூஸிவாந்து என்பனவோடு ஆபிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் தென்னமெரிக்காவின் சில பிரதேசங்களும் விளங்குகின்றன. ஆனால், இப்பிரதேசங்களில் நிலக்கரிப்படிவுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
மேற்படி நிலக்கரிப் பரம்பலை நோக்கும் போது சில பிரதேசங்களில் அதிகமாகவும், சில பிரதேசங்களில் குறைவாகவும், இன்னும் பல பிரதேசங்களில் நிலக்கரிப்படிவுகள் காணப்படுவதில்லை என்பதனை அறியலாம்.
பெற்றோலியம் :
இன்றைய உலக பொருளாதாரத்தில் ஏனைய எரிப்பொருட்களை விட பெற்றோலியம் முக்கிய இடம் வகிக்கிறது. பலமில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உயிரியல் படிவுகள் மூலம் அதிலும் முக்கியமாக கடல் அடியில் காணப்படும் உயிரியல் படிவுகள் மூலம் பெற்றோலியம் உருவானதாக நம்பப்படுகிறது. பெற்றோலியம் 1859ஆம் ஆண்டு எல் டுறேக் என்பவரால் பென்சில் வேனியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது, எண்ணெய் படிவுகளாக உலகின் பல பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.
எண்ணெய் படிவுகளின் பரம்பல் :
எண்ணெய் படிவுகளை அதிகம் கொண்ட நாடுகளாக; ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், வெனிசுவேலா என்பன காணப்படுகின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் மத்தியக் கண்டம், விரிகுடா, ரொக்கி மலைப்பகுதி, அப்பலாச்சியன் என்பவற்றில் எண்ணேய் படிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
எண்ணெய்ப்படிவுகளை அதிகம் கொண்ட நாடுகளாக மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளன. இந்நாடுகளில்; குவைட், சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளில் அதிகளவிலும் ஏனைய பகுதிகளில் குறைந்தளவிலும் எண்ணெய்ப்படிவுகள் காணப்படுகின்றன. இவைத் தவிர்த்து சோவியத் உடமைக் குடியரசு, எகிப்து, லிபியா, அல்ஜீரியா, நைஜீரியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா, புருனை, சிங்கப்பூர், மெக்சிலோ, வெனிசுலா போன்ற நாடுகளும் எண்ணெய்ப்படிவுகள் கொண்ட ஏனைய முக்கிய நாடுகளாக விளங்குகின்றது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டுமே எண்ணெய்ப்படிவுகள் காணப்படுகின்றன.
இயற்கை வாயு :
பெற்றோலியத்தை சுத்திகரிப்பதன் மூலம் இயற்கை வாயு பெறப்படுகிறது. தரமான எரிப்பொருளாகவுள்ள இயற்கை வாயுவானது ஏனைய எரிப்பொருட்களை விட குறைவான சூழல் தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. இயற்கை வாயுவானது சில பிரதேசங்களில் தனித்தும், சில பிரதேசங்களில் பெற்றோலியத்துடனும் காணப்படுகிறது.
இயற்கை வாயுவின் பரம்பல் :
பெற்றோலியப் பரம்பல் காணப்படும் பிரதேசங்களிலே இயற்கை வாயுவின் பரம்பலும் காணப்படும்.
காற்றுச்சக்தி :
பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்ற காற்று சக்தியினை அக்காலக் கட்டத்தில் நீர் இறைக்கவும், தானியங்கள் அரைக்கவும், இயந்திரங்களை இயக்கவும் உபயோகிப்பட்டது. இன்றைய உலகில் காற்று சக்தியானது மின் உற்பத்திக்காகப் பயன்படுகின்றது. காற்று சக்தி சூழல் மாசடைவை தடுக்கின்றது. இச்சக்தியினை உற்பத்தி செய்ய மிக வேகமான காற்று அவசியம்.
காற்று சக்தியின் பரம்பல் :
இன்றைய உலகில் ஐக்கிய அமெரிக்கா, கலிபோர்னியா, டென்மார்க், ஜேர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் காற்று சக்தி பயன்படுகின்றன.
உயிர்த்திணிவு சக்தி :
தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து எரிப்பொருளாகப் பயனபடுத்தப்படும் கழிவுப் பொருட்கள் உயிரியல் சக்திவளம் எனப்படுகிறது. உயிர்த்திணிவு சக்தி வளத்தின் அளவு சூரிய ஒளி, மழை, மண், போசாக்கு கிடைக்கும் சாத்தியக் கூறிலே தங்கியுள்ளது.
உயிர்த்திணிவு சக்தியின் பரம்பல் :
இச்சக்தி வளம் அதிகமாக அயண மண்டல நாடுகளில் குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பரம்பியுள்ளது. இது புதுப்பிக்கக்கூடிய சக்தி வளமாக இருக்கிறது. ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் அதிகம் பரவிக் காணப்படுகிறது.
இவ் சக்தி வளத்தினை அதிகம் பயன்படுத்தப்படும் நாடுகளாக; இலத்தீன் அமெரிக்க நாடான பிரேசில், கோஸ்டாரிகா என்பனவும் ஆசிய நாடுகளான; இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், சீனா, கொரியா, வங்காள தேசம் என்பனவும் ஆபிரிக்க நாடுகளான: உகண்டா, எதியோப்பியா, சூடான் போன்ற விளங்குகின்றன.
நீர் வலு :
காற்று சக்தி வளத்தை போலே நீர் வளமும் ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆரம்பத்தில் நதிக்கரைகளில் தானியம் அரைக்கும் ஆலையை இயக்க நீர் வலு பயன்படுத்தப்பட்டது. இக்காலம் நீர்வலு மின்சக்தியாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
முதன்முதலாக வட அமெரிக்காவிலே நீர் மின் விருத்தி செய்யப்பட்டது. என்றாலும், இன்று உலகம் முழுதும் இமன் பரவலைக் காணலாம். ஐக்கிய அமெரிக்கா உட்பட கனடா, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், நோர்வே, சுவீடன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, ஐப்பான், சீனா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் பிரேசில் மற்றும் ஏனைய சில நாடுகளிலும் நீர் மின் வலுவின் பரம்பலைக் காண முடியும்.
சூரிய சக்தி :
பிரதான சக்தி வளமாக காணப்படும் இவ் சூரிய சக்தி நேரடி வளமாகவும் ஏனைய சக்தி வளங்களின் மூலமாகவும் தொழிற்படுகின்றது. புவி தோன்றிய காலம் முதல் இன்று வரை காணப்படும் இவ்வளம் நிரந்தர சக்தி வளமாகும்.
சில ஐரோப்பா நாடுகள், வட அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்தின் சில பிரதேசங்கள், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து என்பன சூரிய சக்தி வளத்தை சிறிதளவில் பயன்படுத்துகின்றன.
புவி வெப்ப சக்தி :
புவி வெப்பம் மூலம் பெறப்படும் இவ் சக்தி வளம் புவி மேற்பரப்பிற்கு அண்மையிலுள்ள எரிமலைகள், வெப்ப நீரூற்றுக்கள் என்பவற்றிலிருந்து உற்பத்தியாக்கப்படுகின்றது. புவி வெப்ப சக்தியானது மின்சக்தியாக மாற்றப்பட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
புவி வெப்ப சக்தியின் பரம்பல் :
ஜப்பான், நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, மேற்கு அமெரிக்கா, ஐஸ்லாந்து அகிய நாடுகளில் இதன் பரம்பலைக் காணலாம்.
அலைச்சக்தி :
கடற்கரை ஓரங்களில் மீற்றருக்கு 40 kw சக்தி கிடைப்பதாக ஆய்வுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ் அலைச்சக்தி வளம் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்யலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், நோர்வே அகிய நாடுகள் இது குறித்த ஆராய்ச்சிக்கு வழி வகுத்துள்ளன. இதற்காக அதிக தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இதனால் சூழல் தாக்கங்கள் குறைவு. அலைச்சக்தியானது, தற்போது பயன்படுத்தப்படவில்லை என்றாலும், கடலில் ஏற்படும் வற்று பெருக்குகள் மூலமும் சக்தியைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அணுச்சக்தி :
புதுப்பிக்க முடியாத இச்சக்தி வளம் யுரேனியம், தோரியம் ஆகிய மூலகங்களிலிருந்து உற்பத்தியாக்கப்படுகிறது. அணுச்சக்தி, அதிகமாக பயன்படுத்தப்படுவதோடு சூழலில் அதிக தாக்கத்தையும் செலுத்துகிறது.
அணுச்சக்தி வளத்தின் பரம்பல் :
யுரேனியம் படிவுகள் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், மடகஸ்கர், சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
1956இல் பிரித்தானியாவில் உலகின் முதலாவது அணுச்சக்தி நிலையம் உருவாக்கப்பட்டது. இன்று பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மேற்கு ஜேர்மன், சோவியத் ஒன்றியம், சுவீடன், கனடா, ஸ்பைன் ஆகிய நாடுகளும் அணுச்சக்தி நிலையங்களை கொண்டுள்ளன. முடிவுறா வளமாக கருதப்படும் அணுச்சக்தி வளத்தின் பரம்பல் இந்தியா, பாகிஸ்தான் அகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.