நேபாள புவிநடுக்கம் - 2015

உலகிலேயே இந்துக்களை அதிக சதவீதத்தில் கொண்ட நாடு என்ற பெருமையையும் , இமயமலைக்கு அருகாமையில் உள்ள நாடாகவும் விளங்கும் நாடுதான் நேபாளம். 2015 ஏப்ரல் நேபாள நிலநடுக்கம் அல்லது கோகா நிலநடுக்கம் என அழைக்கப்படும் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற புவிநடுக்கத்தினால் சுமார் 8000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன்,  19000 இற்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருந்தனர்.


உலகில் அண்மைக்காலத்தில் நோக்கும்போது கடந்த 2010  ஆம்  ஆண்டில் கெயிட்டியில் 7.0 றிச்டர் அளவுத்திட்டத்தில் ஏற்பட்ட புவிநடுக்கமும், கடந்த 2011 இல் யப்பானில் புவிநடுக்கம் மற்றும் 9.0 றிச்டர் அளவுத்திட்டத்தில் ஏற்பட்ட புவிநடுக்கமும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்திருந்தன. அந்தவரிசையில்  கடந்த 2015 ஏப்ரல் 25 இல் 7.8 றிச்டர் அளவுத்திட்டத்தில் ஏற்பட்ட புவிநடுக்கம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்திய புவிநடுக்கமாக காணப்படுகின்றது.



2015 நேபாள புவிநடுக்கம் ஏற்பட்டது எப்படி?

2015 நேபாள புவிநடுக்கம் ஏற்பட்ட விடயம் தொடர்பாக ஆராய்கின்றபோது முதலில் நாம் தகட்டசைவு தொடர்பான ஓர் அறிமுகத்தினை விளங்கிக்கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

அஸ்தனோஸ்பயர் எனப்படும் மென்பாறைக் கோளத்தின்மேல் மிதக்கும் நிலையிலுள்ளதும்,   மேற்காவுகை ஓட்டச் செயன்முறையினால் சிதைவடைந்த  கற்பாறைத் திணிவுகளே தகடு என அழைக்கப்படுகின்றது. புவியினுடைய உட்பகுதியில் இடம்பெறுகின்ற மேற்காவுகை ஓட்டச் செயன்முறையினால் புவித்தகடுகள் சிதைவடைந்து பெரியதகடுகளாகவும், சிறிய தகடுகளாகவும் பரம்பிக் காணப்படுகின்றன. புவித்தகடுகளை முதநிலைத்தகடுகள், இரண்டாம் நிலைத்தகடுகள், மூன்றாம் நிலைத்தகடுகள் எனவும் பிரிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் புவிமேற்பரப்பானது 7 பிரதான தகடுகளாலும், 8 இற்கும்  மேற்பட்ட சிறிய தகடுகளாலும் உருவாகியுள்ளது.



தகட்டசைவு எனும்போது இடையோட்டில் இடம்பெறுகின்ற மேற்காவுகை ஓட்டச் செயன்முறையினால் புவித்தகடுகள் நகர்ச்சிக்கு உட்படுதல் தகட்டசைவு எனப்படுகின்றது. தகட்டசைவானது பிரதானமாக மூன்று எல்லைகளைத் தோற்று விக்கின்றது.  நிலைமாறும் எல்லை, விலகும் எல்லை, ஒருங்கும் எல்லை ஆகியனவே அத்தகைய பிரதான மூன்று தகட்டு எல்லைகளாகும்.



 இமயமலையின் அண்ணளவாக மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள நேபாளமானது, ஐரோஆசியத்தகடும், இந்தியத்தகடும் ஒன்றையொன்று சந்திக்கும் தென்எல்லைக்கு அண்மையில் குறிப்பாக ஐரோ ஆசியத்தகட்டின் தென்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்நேபாள இமயமலைப்பிராந்தியமானது தகட்டுகளிலுள்ள குறைகள் மற்றும் புவிஅமைப்பியல் ரீதியாக மேலும் ஐந்து உபதகட்டு வலயங்கனாகவும் பிரிக்கப்படுகின்றன. தெராய் சமவெளி, உபஇமயம், சிறிய இமயம், உயர் இமயம், உள் இமயம் ஆகிய ஐந்து பகுதிகளாகவே அவை பிரிக்கப்படுகின்றன.


கண்டத்தகடான ஐரோஆசியத்தகடும், மற்றுமோர் கண்டத்தகடான இந்தியத்தகடும் ஒருங்குகின்ற காரணத்தினால் பொதுவாக இந்தப் பகுதியில் அடிக்கடி புவிநடுக்கங்கள் ஏற்படுவதுடன், நீண்டகால ரீதியில் இவை ஒருங்கியதன் விளைவாக மடிப்புமலையான இமயமலையும் தோன்றியிருந்தது.

இவ்விரண்டு தகடுகளிலும் இந்தியத்தகடானது சற்று ஒப்பீட்டளவில் ஐரோ ஆசியத்தகட்டினை விட அடர்த்தி கூடியதாகக் காணப்படுவதனால் ஒருங்கலின்போது, இந்தியத்தகடானது கீழே அமிழ்ந்துபோக ஐரோ ஆசியத்தகடானது மேலே ஏறி அதிலுள்ள அடையல்கள் உயர்ந்து இமயமலையைத் தோற்றுவித்துள்ளன. அதுமட்டுமன்றி இமயமலையின் எவரெஸ்ட் பகுதியும் இந்தச் செயற்பாட்டினால் சிறிய அளவில் வருடந்தோறும் உயர்ச்சியடைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.



புவியானது ஆரம்பத்தில் பஞ்சியா எனப்படுகின்ற ஒரே நிலத்திணிவாக இருந்து பின்னர், உடைந்து நகர்ச்சியடையத் தொடங்கும்போது தற்போதைய இந்திய நிலத்திணிவானது ஐரோ ஆசிய தகடும் வெகு தொலைவில் காணப்பட்டது. ஆனால் அவை சுமார் 71 மில்லியன் வருடங்கள் வருடங்கள் முன்னரான காலப்பகுதியிலிருந்து அண்ணளவாக வடக்கு நோக்கிய ஒரு நகர்வினை கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் இந்த நகர்வுவேகம் வருடங்களுக்கு 16 சென்ரிமீற்றர்கள் வரையில் காணப்பட்டதாகவும், பின்னர் அது வருடத்திற்கு 5சென்ரிமீற்றர் என்ற வேகத்தில் நகர்ந்து வந்த இந்தியத்தகடானது ஐரோ ஆசியத்தகடுடன் ஒருங்கி தற்போதைய இடத்தில் நிலைத்தது எனவும், புவிச்சரிதவியலாளர்களால் குறிப்பிடப்படுகின்றது. தற்போது  இந்த நகர்வு வருடத்திற்கு 45 மில்லிமீற்றர் என்ற அளவில் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.






இமயமலையானது ஒரு அமிழும் குறை வலயத்தில் காணப்படுவதுடன், அதனை அண்மித்த பிரதேசங்களினுள்ளே நேபாளமும் காணப்படுகின்றது. கடந்த 25 ஏப்ரல் 2015 இல்  இந்த இந்திய மற்றும் ஐரோஆசிய தகடுகளுக்கிடையிலான ஒருங்கலில் ஐரோசியா ஆசியத்தகட்டினை , இந்தியத்தகடானது மீறியபோதே ஏற்பட்டதாக ஐக்கிய அமெரிக்காவிக் புவிச்சரிதவியல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.



தகடுகள் வழமையாக மெதுவாக நகர்கின்றன,  ஆனால் அவற்றின் முனைகள் உராய்கின்றபோது இடையிடையே சிக்கிவிடும். இவ்வாறு இடையிடையே அவற்றின் வழமையான நகர்வு தடைப்பட்டு சிக்கிவிடுகின்ற போதே புவிநடுக்கங்களின் மூலம் அவை தமது சக்தியை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் தமது வழமையான சமநிலைக்கு வருவதற்காக இந்த சக்தியினை வெளிப்படுத்தி வழைமயான நகர்வு நிலைக்கு புவித்தகடுகள் வருகின்றன. இந்த சக்தியை புவிநடுக்கமாக  வெளிப்படுத்துகின்றபோது அவை புவிநடுக்க அலைகளாக புவியோட்டினூடாக பணயம் செய்வதுடன், அவற்றின் மூலமாக அதிர்வுகளையும் நாம் உணர்கின்றோம்.

1934 ஆம் ஆண்டு இடம்பெற்ற நேபாள் பீகார் நிலநடுக்கத்தின் பின்னர், பெரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்திய ஓர் அனர்த்தமாக இந்த புவிநடுக்கம் நேபாள நாட்டின் வரலாற்றில் காணப்படுகின்றது. ஏற்கனவே புவிப்பௌதிகவியலாளாகள் மற்றும் பல வல்லுனர்களினால் நேபாளத்தின் புவிஅமைப்பியில் , நகராக்கம் மற்றும் கட்டடக்கலை போன்ற காரணங்களினால் புவிநடுக்கத்திற்கு உள்ளாகக்கூடிய நிலையில் காணப்படுவதாக எச்சரித்து வந்த நிலையில் இந்தப் புவிநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


\
அதுமட்டுமன்றி பாரிய புவிநடுக்கம் ஏற்பட்டதன் பின்னர் பல அதிர்வுகள் அந்தப் பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்துகொண்டு இருந்ததுடன், மே 12 ஆம் திகதி பெரியதொரு புவிநடுக்கம் சீன எல்லைக்கு அருகாமையில் காத்மண்டுவிற்கும் எவரெஸ்ட் மலைப்பகுதிக்கும் இடையிலான நேபாளத்தின் கோடாரி என்ற பகுதியில் ஏற்பட்டது.இந்தப் புவிநடுக்கத்திலும் அண்ணளவாக 50 பேர் வரையில் நேபாள நாட்டினர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.



2015 நேபாளம் புவிநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள்

•    நிலவதிர்வுகள் சுமார் 2000 கிலோமீற்றர் வரையிலான பிரதேசங்களில் உணரப்பட்டதுடன், பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்தன. இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டதுடன், பீகாரில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. அத்துடன் சீனா, பாகிஸ்தான், பூட்டான், வங்களாதேசம் முதலிய நாடுகளிலும் நிலஅதிர்வுகள் பதிவாகின.


•    புவிநடுக்கம் காரணமாக சுமார் 8259  பேர் வரையிலானோர் உயிரிழந்ததுடன்,  19000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தோரில் நேபாள நாட்டைச் சேர்ந்தோர் 8151 பேரும், இந்தியர் 78 பேர், சீனர் 16 பேர், பங்காளதேசத்தவர் 4 பேரும் உள்ளடங்குவர்.
•    புவிநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் மலையில் ஏற்பட்ட பனிமலைச் சரிவினால் லாங்டாங் பள்ளத்தாக்கில் வசித்தவர்களில் ஆகக்கு குறைந்தது 19 பேர் உயிரிழந்திருந்ததுடன், 250 பேர் வரையில் காணமல் போயுள்ளதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
•    நாட்டினுடைய பல மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் புவிநடுக்கத்தினால் சரிமட்டமாக்கப்பட்டதுடன், 100000 இற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்த நிலையில் உள்ளனர்.
•    யுனெஸ்கோவின் உலக மரபுரிமைகளுள் அடங்குகின்ற காத்மண்டுப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த காத்மண்டு டர்பார் சதுக்கம், படான் டர்பார் சதுக்கம் மற்றும் பக்தாபூர் டர்பார் சதுக்கம் முதலிய கட்டடங்களும் சேதமடைந்தன.
•    புவிநடுக்கம் காரணமாக இமயமலையானது 3 அடியினால் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனை செய்மதிகளின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இமயமலை மாத்திரமன்றி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் உயரம் குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.









ஆசிய நாடுகளிலேயே அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடான நேபாளத்தில் இத்தகையதொரு பாரியதொரு புவிநடுக்கமானது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டுகொள்வதற்குவதற்கு பல்வேறு நாடுகள் உதவியளித்து வருகின்றபோதிலும், எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் புவிநடுக்கத்தின் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்வதற்குரிய ஒரு பொறஜமுறையினைப் பின்பற்றவேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதனையே அதற்கடுத்து இம்மாதம் (மே 12) இடம்பெற்ற புவிநடுக்கமும் உணர்த்திச் சென்றுள்ளது.

 Article By:- S.Akshayan