இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு நிகழ்வினால்
மனிதன் உட்பட்ட உயரினங்களுக்கும் , சூழலுக்கும், உடமைகளுக்கும்
பாதிப்புகள் ஏற்படுகின்றபோது அதனை நாம் இயற்கை அனர்த்தம் எனசுருக்கமாக
வரையறுக்கலாம்.\
பொதுவாக இயற்கை அனர்த்தமானது உயிரியல் அனர்த்தம், புவிப்பௌதிகவியல் அனர்த்தம், காலநிலை அல்லது வானிலையியல் அனர்த்தம் என மூன்றாகப் பாகுபடுத்தப்படுகின்றது. சர்வதேச இயற்கை அனர்த்த தரவுத்தளமானது இயற்கை அனர்த்தங்களை பிரதானமாக 06 வகையாகப் பாகுபடுத்தியுள்ளது.
01.புவிப்பௌதிகவியல் அனர்த்தம் :- திண்மப் புவிப் பாறைகளிலிருந்து தோற்றம் பெறுகின்ற அனர்த்தங்கள் புவிப்பௌதிகவியல் அனர்த்தங்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக புவிநடுக்கம், எரிமலைச் செயற்பாடு, பருப்பொருள் அசைவு முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
02.வளிமண்டலவியல் அனர்த்தம் :- குறுகிய காலத்தில் வளிமண்டலத்தின் நிலைமைகள் மற்றும் குழப்பமான வானிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்கள் வளிமண்டலவியல் அனர்த்தம் எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக அதீத வெப்பநிலை, புயல்(சூறாவளி, தொனோடா); , மின்னல் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
03.நீரியல் அனர்த்தம் :- புவிமேற்பரப்பு மற்றும் உபமேற்பரப்பு நன்னீர் மற்றும் உவர்நீரினுடைய பரம்பல் , நகர்வு, நிகழ்வு போன்றவற்றினால் ஏற்படுகின்ற அனர்த்தம் நீரியல் அனர்த்தம் எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக வெள்ளப்பெருக்கு, அலையின் செயற்பாடு, நிலச்சரிவு (ஈரம்) முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
04.காலநிலையியல் அனர்த்தம் :- நீண்ட காலரீதியிலான வளிமண்டல நிலைமைகளினால் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் காலநிலையியல் அனர்த்தம் எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக வரட்சி, காட்டுத்தீ முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
05.உயிரியல் அனர்த்தம் :- உயிருள்ள அங்கிகளினுடைய வெளிப்பாட்டின் காரணமாக அல்லது அவற்றினுடைய நச்சுப்பொருட்களின் காரமாக ஏற்படுகின்ற அனர்த்தங்கள் அல்லது அவை கொண்டுவருகின்ற தொற்றுக்கள் மூலம் உயிரினங்களுக்கு ஏற்படுகின்ற அனர்த்தங்கள் உயிரியல் அனர்த்தம் எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக விலங்குகளின் ஆபத்து(யானைத்தாக்கம், பாம்புகடித்தல்), தொற்றுநோய் , பூச்சித் தொற்று முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
06. புவிவெளிக்காரணி அனர்த்தங்கள் :- புவியினுடைய எல்லைக்கப்பால் உள்ள எரிகற்கள், விண்வீழ்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் போன்றன புவிக்கு அருகாக கடந்துசெல்லல், புவியின் வளிமண்டலத்தினுள் நுழைதல் மற்றும் அல்லது உள்ளக கிரகங்களுக்கிடையிலான மாற்றம் காரணமாக புவியின் இயக்க மாற்றம் போன்றவற்றினால் ஏற்பாடுகின்ற அனர்த்தங்கள் புவிவெளிக்காரணி அனர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அதிர்ச்சி அலைகள், மண்ணியல் புயல்கள், வளிமண்டல வெப்பநிலை மாற்றம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
Article By AKSHAYAN

