படிவுவீழ்ச்சியின் உருவாக்க வகைகள்

நீராவியானது உயர்ந்து குளிர்ச்சியடைந்து ஒடுங்கி முகில்களாக மாறி மழைவீழ்ச்சி நிகழ்கின்றது. புவிமேற்பரப்பிலிருந்து வளிமண்டலத்தின் மாறன் மண்டலத்தில் குத்தாக மேல்நோக்கிச் செல்லச் செல்ல வெப்பநிலை குறைவடைந்து செல்கின்றது. இதன் காரணமாக வெப்பத்தினால்  விரிவடைந்த நீராவியானது மேல்நோக்கிச் செல்லும்போது குளிர்ச்சியடைகின்றது.  முகில்களில் உள்ள நீர்த் துளிகள் ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் ஈர்ப்புக்கு வளர்ச்சியடைந்து    அவற்றினுடைய நிறை காரணமாக கீழே படிவுவீழ்ச்சியாக விழுகின்றது.


படிவுவீழ்ச்சியின் உருவாக்க வகையாக பிரதானமாக தரைத்தோற்ற படிவுவீழ்ச்சி, மேற்காவுகை படிவுவீழ்ச்சி, பிரிதள படிவுவீழ்ச்சி என மூன்று வகையாகப் பாகுபடுத்தலாம்.

1. மேற்காவுகை படிவுவீழ்ச்சி (Convectional Precipitation) :- 

அதிக வெப்பம் காரணமாக நீர்த்துணிக்கைகள் ஆவியாகி மேலெழுந்து வளிமண்டலத்தில் ஒழுங்கி மழையாகப் பொழிவதனை மேற்காவுகை படிவுவீழ்ச்சி (மழை) என அழைக்கின்றனர். மேற்காவுகை மழையானது குறிப்பாக அதிக வெப்பம் நிலவுகின்ற காலங்களில் அல்லது கோடைகாலங்களில் இடிமின்னலுடன் கூடிய பெருமழையாகப் பொழிகின்றது. பெரும்பாலும் மேற்காவுகை மழைவீழ்ச்சியானது அயனப் பிரதேசங்களில் அதிகளவில் நிகழ்வதுடன், பகல் வேளையில் ஆவியாகி மாலைவேளையில் இடியுடன் கூடிய மழையாகப் பொழிகின்றது.

புவிமேற்பரப்பை வந்தடையும் சிற்றலைக் கதிர்வீச்சானது நெட்டலைக் வெப்ப சக்தியாக மாற்றமமைடகின்றது. இந்த வெப்ப சக்தியாது புவிமேற்பரப்பில் உள்ள உள்ள வளியினைச் சூடாக்கின்றது.

வெப்பமடைந்த வளியானது அதிக சக்தியைப் பெறுவதுடன் எமது வளிமண்டலத்தினுடாக புவியினுடைய மேற்பரப்பிலிருந்து தொலைவாக செல்வதுடன், அது செக்கணுக்கு 25 மீற்றர் என்ற வேகத்திலும் அனலாக செல்கின்றது.

வெப்பமடைந்து செல்கின்ற நீராவி வளித்துணிக்கையானது உயரத்திற்கேற்ப 100 மீற்றருக்கு 1 பாகை செல்சியஸ் என்ற விகிதத்தில் குளிர்ச்சியடைகின்றது. குளிர்ச்சியடைந்த நீராவியானது ஒடுங்குவதுடன் அவை திரண்மழை முகிலைத் தோற்றுவித்து மழையாகப் பொழிகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கையின் மார்ச், ஏப்ரல், ஒக்டோபர், நவம்பர் முதலிய காலங்களில் இத்தகைய மேற்காவுகை மழையினை பெரும்பாலும் அவதானிக்கலாம். 




2. தரைத்தோற்ற படிவுவீழ்ச்சி (Relief or Orographic Precipitation) :-

மலைப்பகுதிகளில் அல்லது உயர்நிலப்பகுதிகளில் வளித்திணிவுகள் மேலுயர்த்தப்படுவதனால் வளித்திணிவுகள் ஒடுங்கி படிவுவீழ்ச்சியாகக் கிடைத்தல் தரைத்தோற்ற படிவுவீழ்ச்சி (மழை) எனப்படுகின்றது. கடல் அல்லது நீர்நிலைப் பகுதிகளிலிருந்து வருகின்ற சூடான வளித்திணிவானது மலைச்சாய்வகள் அல்லது உயர்நிலங்களின் சாய்வுகளில் பட்டு மேலுயர்த்தப்படுகின்றபோது குளிர்ச்சியடைந்து ஒடுங்குகின்றன. ஒடுங்கிய வளித்திணிவுகள் மலைச்சாய்வகள் அல்லது உயர்நிலப்பகுதியின் சாய்வுகளில் அதாவது காற்றுப் பக்க சாய்வகளில் மழை முகில்களாக தோற்றம்பெற்று படிவுவீழ்ச்சியை வழங்குகின்றன.

அதேவேளை மலைப்பகுதியின் காற்று ஒதுக்குப் பகுதியில் வெப்பமான வளித்திணிவானது கீழிறங்குவதுடன், அது வரண்ட தன்மையையும் கொண்டிருக்கும். சிலவேளைகளில் சிறியளவிலான மழைவீழ்ச்சி இந்தக் காற்று ஒதுக்குப் பக்கத்தில் நிகழக்கூடும்.

இலங்கையில் இந்த தரைத்தோற்ற மழையினை இரண்டு பருவங்களில் அவதானிக்கலாம். அதாவது இலங்கையின் ஈரவலயம் மழைவீழ்ச்சியைப் பெறுகின்ற தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைக்காலம் (மே- செப்டம்பர்), உலர்வலயம் மழையைப் பெறுகின்ற வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் (டிசம்பர் – பெப்ரவரி) ஆகிய இரண்டு பருவங்களிலும், இரண்டு வேறுபட்ட பிரதேசங்களில் இத்தகைய மழை கிடைக்கின்றது. தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் இலங்கையின் மலைநாட்டின் மேற்குச் சாய்வுகள் அதிக மழையைப் பெறுவதுடன், மலை நாட்டின் கிழக்கு சாய்வு வரண்ட காலநிலையை அனுபவிக்கின்றதை அறியலாம்.




3. பிரிதள படிவுவீழ்ச்சி  (Frontal Precipitation) :-

குளிர் மற்றும் வெப்பக் காற்றுத் திணிவுகள் சந்திக்கின்ற பிரிதள எல்லையின் காரணமாக தோற்றம் பெறும் படிவுவீழ்ச்சியினை பிரிதள படிவு வீழ்ச்சி என அழைக்கின்றனர். பிரித்தானியா போன்ற இடைவெப்ப வலய நாடகளில் பிரிதள மழைவீழ்ச்சி அதிகளவில் நிகழ்கின்றது. குளிர்ச்சியான முனைவு வளித்திணிவும், வெப்பமான அயன வளித்திணிவும் ஒன்றெயையொன்று சந்திக்கின்றபோது அவை ஒன்று சேர்ந்துவிடுவதில்லை. மாறாக அவை ஒரு முகப்பினைத் தோற்றுவிக்கின்றன. இவ்வாறு குளிர்ச்சியான வளித்திணிவும், வெப்பமான வளித்திணிவும் சந்திக்கின்றபோது உருவாகின்ற முகப்பினை பிரிதளம் என அழைப்பர்.

குளிர்ச்சியான வளித்திணிவானது  வெப்பமான வளித்திணிவிலும் பார்க்க பாரமானதாகையால் குளிர்ச்சியான வளித்திணிவானது கீழிறங்குகின்றபோது வெப்பமான வளித்திணிவானது பாரமான திணிவில்மீது மேல்உயர்கின்றது.
மேல் உயர்ந்த வெப்பமான வளித்திணிவானது  குளிர்ச்சியடையவேண்யடி ஏற்படுவதுடன், குளிர்ச்சியான காற்றுத்திணிவின் ஓரமான வெப்பமான வளித்திணிவானது தொடர்பு படுகின்றது. அத்துடன் அவையும் பிரிதளத்தில் குளிர்ச்சியடைகின்றன.

பிரிதளப்பகுதியில் குளிர்ச்சியடைந்த வளித்திணிவுகள் மழைமுகில்களை உருவாக்கி பிரிதள முகப்பு பகுதி வழியே மழையைக் கொடுக்கின்றன. 


   
Article By :- AKSHAYAN