புவி - வளிமண்டல ஒழுங்கில் இடம்பெறும்
பௌதீகச் செயன்முறைக்கான வெப்பச் சக்தியில் 99.7 சதவீதம் சூரியனிடமிருந்து
பெறப்படுகின்றது. இவற்றுடன் எரிமலை வெடிப்புக்கள், வெப்ப நீரூற்றுக்கள்
ஆகிய புவிவெப்பச் சக்தியிலிருந்தும் சக்தி கிடைக்கின்றது.
வெப்பசக்தியானது வளிமண்டலத்தில் 5 பிரதான வழிகளில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது.
1. கடத்தல் (Conduction)
2. மேற்காவுகை (Convection)
3. கதிர் வீசல் (Radiation)
3. கதிர் வீசல் (Radiation)
4. புடைக்காவுகை (Advection)
5. மறைவெப்பக் கடத்தல் (Latent heat transfer)
5. மறைவெப்பக் கடத்தல் (Latent heat transfer)
கடத்தல்:- ஊடுபொருட்கள் ஊடாக மூலக்கூறுக்கு மூலக்கூறு வெப்பம்
இடமாற்றப்படும் செயன்முறையே கடத்தல் ஆகும். பொதுவாக வெப்பம் திண்மங்கள்,
திரவங்கள் ஊடாக விரைவாக கடத்தப்படுகின்றது. ஆனால் வாயுக்களின் ஊடாக
வெப்பக்க கடத்தல் மிகவும் தாமதமாகவே நிகழ்கின்றது. ஏனெனில் காற்றுக்களின்
மூலக்கூறுகள் ஒன்றிலிருந்து மற்றையது தூரத்தில் அமையப்பெற்றிருத்தல் ஆகும்.
மேற்காவுகை :- அதிகரிக்கும் வெப்பத்தினால் வெப்பமடைந்த வளிமண்டலம் நிலையிருந்து இன்னொரு நிலைக்குப் பௌதீக ரீதியாக கொண்டு செல்லப்படும் செயன்முறையே மேற்காவுகையாகும். அதாவது சூடான அடர்த்தி குறைந்த ஒரு திரவத்தின் ஒரு பகுதியின் எழுச்சியே மேற்காவுகை ஆகும். மேற்காவுகைக் கலங்களுக்கிடையில் வலிமையான மேல் இழுப்பைக் கொண்ட காற்றின் அசைவு இடம் பெறுகின்றது.
கதிர்வீசல்:- வான்வெளியினூடாக அசையும் அலைகளின் செயன்முறையினால் இடமாற்றப்படும் சக்தியே கதிர்வீசலாகும். வானவெளியினூடாக அசையும் இவ் அலைகள் ஒளியின் வேகத்தில் (3x108m/s) செல்கின்றன. வெப்பத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு பொருளிலுமிருந்தும் வீசப்படும் அலை போன்ற வடிவமே மின்காந்த கதிர்வீசல் எனப்படும். கதிர்வீசற் சக்தியின் அலைகள் வேறுபட்ட அலை நீளங்களைக் கொண்டுள்ளன.
புடைக்காவுகை:- வளிமண்டலத்தின் திணிவு திணிவான அசைவினால் கிடையாக இடமாற்றப்படும் வெப்பசக்தியே புடைக்காவுகை ஆகும். உதாரணமாக, வடகோளத்தில் தெற்கிலிருந்து வீசும் காற்றுக்கள் சூடான வளியை முனைவுப் பக்கமாக இடமாற்றம் செய்கின்றன.
மறைவெப்பக்கடத்தல்:- நீரை அதன் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவதற்கு தேவைப்படுகின்ற சக்தியின் பரிமாற்றமே மறைவெப்பக்கடத்தல் ஆகும். அதாவது நீரானது ஆவியாகும்போது அதிகளவு வெப்பத்தினை சேமித்து வைத்துக் கொள்கின்றது. நீரானது ஒடுங்கும்பொழுது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிற்கு இவ்வெப்பத்தினை வெளிவிடுகின்றது.
[Article By :- Akshayan BA (Hons) special in Geography - Email:- akshayansm@gmail.com]
References:-
அண்டனி நோபேட்.எஸ், 2007, காலநிலையியலுக்கு ஓர் அறிமுகம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை




