வளிமண்டலச் சுற்றோட்டம்

வளிமண்டலத்தில் இடம்பெறும் வேறுபட்ட காற்றோட்டங்களின் பொதுவான அல்லது சராசரியான போக்கே வளிமண்டலப் பொதுச் சுற்றோட்டமாகும். அது மேற்பரப்பில் இடம்பெறும் கிடையானதும் குத்தானதுமான அசைவுகளுடன் மாறன் மண்டலத்திற்கு மேல் இடம்பெறும் வேகமான சில காற்றோட்டங்களையும் உள்ளடக்கும். 


1)    வளிமண்டலச் சுற்றோட்டக் காரணிகள்

வளிமண்டலப் சுற்றோட்டதிற்குரிய அடிப்படைக் காரணி ஞாயிற்றுக் கதிர்வீச்சுப் பரம்பல் வேறுபாட்டினால் உருவாகின்ற அமுக்கவேறுபாடு ஆகும். அத்துடன் வளித்திணிவுப் பெயர்ச்சிகளினால் ஏற்படுகின்ற  கோணக்கதி அசைவும் செல்வாக்குச் செலுத்துகின்றது.
•    அமுக்கவேறுபாடு:- பொதுச் சுற்றோட்டத்தின் முதலாவது காரணியாக அமுக்கவேறுபாடு காணப்படுகின்றது. புவிமேற்பரப்பின் கதிர்வீசற்பரம்பல் தாழ்அகலக் கோடுகளில் மிதமிஞ்சிய சக்தியையும் ஏணைய முனைவு நோக்கிய பகுதிகளில் குறைவானதாகவும் சக்தியை வழங்குகின்றன. இதனால் அமுக்க வேறுபாடுகள் புவிமேற்பரப்பில் ஏற்பட, காற்றுக்களின் இயக்கத்தை அவ்வமுக்க வலயங்கள் தோற்றுவிக்கின்றன. இதனால் உயரமுக்கங்களிலிருந்து தாழமுக்கத்தை நோக்கி காற்றுக்கள் ஒடுங்குகின்றன. மத்திய கோட்டுப் பகுதியில் தாழமுக்கம் அமைந்தமைக்கு அப்பிரதேசத்தில் நிலவும் உயர்வெப்பநிலையும் முனைவுப் பகுதிகளில் உயரமுக்கம் ஏற்படுவதற்கு அப்பகுதிகளில் நிலவும் தாழ்வெப்பநிலையுமே காரணமாகின்றன.

•    கோணக்கதி அசைவு:- பொதுச்சுற்றோட்டத்தின் இரண்டாவது காரணியாக கோணக்கதி அசைவு காணப்படுகின்றது. கோணக்கதி அசைவு என்பது ஒரு பொருளின் நிறையில் ஒவ்வொரு அலகும் ஒரு நிலையான அச்சைச் சுற்றுகையில் அதன் வேகம் அச்சில் இருந்து இருக்கும்தூரத்தின் விகதாசாரமாகும். சீரான வேகத்தில் சுழலும் புவிக்கு வளிமண்டலம் இருப்பதனால் இந்தக் கோணக்கதி தோன்றுகின்றது. மத்திய கோட்டிலேயே கோணக்கதி மிகவும் கூடுதலாகவுள்ளது. அது துருவத்தை நோக்கிச் செல்லச் செல்ல படிப்படியாகக் குறைந்து ஈற்றில் பூச்சியமாகின்றது. கீழைக்காற்றுக்களுக்கும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் சுழலும் புவிக்குமிடையில் ஏற்படும் உராய்வே தாழ்அகலக்கோடுகளில் கிழக்குநோக்கிய கோணக்கதியை உருவாக்குகின்றது.


2)    அமுக்க வலயங்கள்

ஓர் அலகுப் பரப்பில் தாக்கும் வளியின் நிறையினால் உண்டாகும் விசையே அப்பரப்பின் வளியமுக்கம் எனப்படும். பொதுவாக அதிக வெப்ப நிலை நிலவும் பகுதிகளில் வளி வெப்பத்தால் விரிவடைந்து மேலெழுந்து செல்ல அவ்விடத்தை நிரப்ப அயலிலுள்ள குளிர் வளித்திணிவு வந்தடைகின்றது. வெப்பநிலை அதிகம் நிலவும் பகுதிகளில் வளி விரிவடைந்து மேலெழுவதால் தாழமுக்க நிலையும், வெப்ப நிலை குறைவாக நிலவும் பகுதிகளில் குளிர்காற்றுத்திணிவுகளின் காரணமாக உயரமுக்க நிலையும் காணப்படுகின்றது.          இதற்கமைய 7 அமுக்க வலயங்கள் புவிமேற்பரப்பில் காணப்படுகின்றன.


1.    மத்தியகோட்டுத் தாழமுக்க வலயம்
2.    வடஅயனஅயல் உயரமுக்க வலயம்
3.    தென்அயனஅயல் உயரமுக்கவலயம்
4.    வடமுனைவுஅயல் தாழமுக்க வலயம்
5.    தென்முனைவுஅயல் தாழமுக்க வலயம்
6.    வடமுனைவு உயரமுக்க வலயம்
7.    தென்முனைவு உயரமுக்க வலயம்



3)    காற்றுக்கள்

அசைகின்ற வளியே காற்று எனப்படுகின்றது.  ஓரிடத்தில்உள்ள வளி வெப்பத்தினால்  விரிவடைந்து பாரமற்றதாகி மேலெழுகின்றது. இதன் போது அவ்விடத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னோர் இடத்தில் இருக்கும் வளி விரைந்து வரும் போது காற்று தோற்றம் பெறுகின்றது. புவி மேற்பரப்பில் வீசுகின்ற காற்றுக்களின் திசைகள் அமுக்கப்பரம்பல், புவித்திருப்பல் விசை, உராய்வு விசை ஆகியவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றன.

•    அமுக்கப்பரம்பல் காற்றின் திசையை தீர்மானிக்கின்றது. காற்றுக்கள் தாழமுக்கத்தை நோக்கி ஒன்று குவிவதும், உயரமுப்பம் நிலவும் பகுதிகளிலிருந்து பிரிந்து செல்லும் நிலையும் காணப்படுகின்றது. இதனால் உயரமுக்கம் அமைந்துள்ள திசையிலிருந்து தாழமுக்கம் அமைந்துள்ள திசையை நோக்கி காற்றுக்கள் வீசுகின்றன.

•    புவித்திருப்பல் விசை அல்லது கொறிலியோசு விசையும் காற்றுக்களின் திசையில் செல்வாக்குச் செலுத்துகின்றது. புவியானது ஒரு அச்சில் மேற்குக் கிழக்காகச் சுழல்கின்றது. அவ்வாறு சுழல்கின்றபோது புவியின் மேற்பரப்பில் அசைகின்ற பொருட்கள் ஒருவிதத் திசை திருப்பத்திற்கு உட்படுகின்றன. அவ்வாறு திசை திரும்பும் புவிச் சுழற்சி விசையே கொறிலியோசு விசை என அழைக்கப்படுகின்றது.

புவித்திருப்பல் விசை மூலம் புவியின் மேற்பரப்பில் அசைந்து செல்லும் பொருட்கள் வடவரைக் கோளத்தில் அதன் வலது பக்கத்திற்கும் தென்அரைக் கோளத்தில் அதன் இடது பக்கத்திற்கும் புவிச்சுழற்சி காரணமாக திசை திருப்பப்படுகின்றன என பெரல் என்பவர் ஒரு விதியை அமைத்தார்.




•    அமுக்கப்பரம்பல், கொறிலியோசு விசை என்பவற்றுக்கு அடுத்தாக உராய்வு விசையும் காற்றின் திசையை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஏறத்தாள 900 மீற்றர் உயரங்களில் வீசுகின்ற காற்றின் திசைக்கும், புவியின் மேற்பரப்பை அண்மித்து வீசுகின்ற காற்றின் திசைக்கும் ஒப்பளவில் வேறுபாடுள்ளது. காற்றுக்கும் தரையின் உயரங்களுக்குமிடையே நிகழும் மோதல் காற்றினைத் தடைப்படுத்தி திசைதிருப்பி விடுகின்றது. பாரிய மலைத் தொடர்களும் தாவரங்களும் காற்றினை உராய்ந்து திசை திருப்பி விடுகின்றன.




4)    கோட்காற்றுக்கள்

புவியின் மேற்பரப்பில் வீசுகின்ற பெருங்காற்றுத் தொகுதிகள் கோட்காற்றுத்தொகுதிகள் எனப்படுகின்றன. காற்றுகள் எப்பொழுதும் ஒரு உயரமுக்க வலயத்திலிருந்து தாழமுக்க வலயத்தை நோக்கி வீசுகின்றன. புவியில் காணப்படுகின்ற ஏழு அமுக்க வலயங்களுக்கும் அமைய ஆறு காற்றுக்கள் வீசுகின்றன. இவ் ஆறு காற்றுக்களும் பிரதானமாக மூன்று வகைக்குள் அடக்கப்படுகின்றன. அவை வியாபாரக் காற்றுக்கள், மேலைக்காற்றுக்கள், முனைவுக் கீழைக்காற்றுக்கள் ஆகும்.
அயன அயல் உயரமுக்க வலயங்களிலிருந்து மத்திய கோட்டுத் தாழமுக்க வலயத்தை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் வியாபாரக் காற்றுக்கள் அல்லது தடக் காற்றுக்கள் எனப்படுகின்றன.  வடக்கில் வடகீழ் திசையிலிருந்து வீசும் காற்றினை வடகீழ் வியாபாரக் காற்று எனவும், தெற்கே தென்கீழ் திசையிலிந்து வீசும் காற்றினை தென்கீழ் வியாபாரக் காற்று எனவும் அழைக்கின்றனர்.

அயன அயல் உயரமுக்க வலயங்களிலிருந்து முனைவுகளின் அயலிலுள்ள தாழமுக்க வலயங்களை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் மேலைக் காற்றுக்கள் எனப்படுகின்றன. வடக்கில் தென் மேலைக் காற்றுக்கள் எனவும், தெற்கில் வடமேலைக் காற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

முனைவிலுள்ள உயரமுக்க வலயங்களிலிருந்து முனைவு அயல் தாழமுக்கவலயத்தை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் முனைவுக் கீழைக் காற்றுக்கள் எனப்படுகின்றன. வடக்கில் வடமுனைவுக்கீழைக் காற்று எனவும், தெற்கில் தென்முனைவு கீழைக் காற்று எனவும் அழைக்கப்படுகின்றன.

காற்றுக்கள் வீசும் திசையில் மாற்றங்கள் காணப்படுவதற்கு புவித்திருப்பல் விசை, அமுக்க வேறுபாடுகள், உராய்வு விசை என்பன காரணமாக அமைகின்றன. காற்றுக்களின் வேகத்தை அளப்பதற்கு போபோட் அளவுத்திட்டம் பயன்படுகின்றது.