நீரியல் வட்டம் (Hydrologic Cycle)

திண்மம்,திரவம், வாயு ஆகிய நிலையிலுள்ள நீரானது நிலம், கடல், வளிமண்டலம் ஆகியவற்றுக்கிடையில் ஒரு வட்ட வடிவில் செயற்படும் நிலையினை பொதுவாக நீரியல் வட்டம் எனப்படுகின்றது. அதாவது நீரானது ஆவியாகுதல், ஒடுங்குதல், படிவுவீழ்ச்சி, கழுவுநீரோட்டம் ஆகிய செயன்முறைகளுக்கூடாக ஒரு வட்ட வடிவில் இயற்குவதனை இது குறித்து நிற்கின்றது.  

அந்தவகையில் நீரியல் வட்டத்தில் பிரதானமாக நான்கு செயன்முறைகள் முக்கியம் பெறுகின்றன.
1.    ஆவியாதல்
2.    ஒடுங்குதல்
3.    படிவுவீழ்ச்சி
4.    கழுவுநீரோட்டம்


1. ஆவியாதல் - சமுத்திரம், உள்நாட்டு நீர்நிலைகள், உயிரினங்கள் ஆகியவற்றில் உள்ள  நீரானது வெப்பத்தின் காரணமாக வாயு நிலைக்கு மாற்றப்பட்டு மேலெழும் செயன்முறை ஆவியாதல் எனப்படுகின்றது. பொதவாக சமுத்திரங்கள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகள் ஆகியவற்றில் இருந்து திரவ நிலையிலிருந்து வாயுவாகும் செயன்முறை ஆவியாதல் எனவும், உயிரினங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து நீரானது வாயுவாக மேலெழுதல் ஆவியுயிர்ப்பு எனவும் குறிப்பிடப்படுகின்றது

2. ஒடுங்குதல் - ஆவியாதல் மூலம் வளிமண்டலத்தை அடைந்த நீராவியானது குளிர்வடைந்து திண்மமாகவோ அல்லது திரவமாகவோ மாற்றமடையும் செயன்முறை ஒடுங்குதல் எனப்படுகின்றது. ஆவியாதல் மூலம் வளிமணடலத்தையடைந்த நீராவியானது நிரம்பிய வளியாக மாறி பனிபடு நிலைய அடைகின்றது. பனிபடுநிலையை அடைந்த நீராவியானது மேலும் குளிர்வடைவதனாலேயே அவ்வளி கொண்டுள்ள ஈரப்பதனானது திண்மமாகவோ திரவமாகவோ மாற்றமடைகின்றது. வளிமண்டலத்தில் உள்ள உப்பு, கந்தகம், தூசுக்கள் முதலிய உட்கருக்களைச் சுற்றியே நீராவியானது திரவமாகவோ அல்லது திண்மமாகவோ ஒடுங்குகின்றது.

3. படிவுவீழ்ச்சி ஒடுங்குதல் மூலம் திரவமாகவோ அல்லது திண்மமாகவோ மாற்றமடைந்த நீராவியானது நிலத்தை நோக்கி பல்வேறு வடிவங்களில் வீழ்கின்றபோது படிவுவீழ்ச்சி எனப்படுகின்றது. உட்கருக்களைச் சுற்றி ஒடுங்கிய நீராவினாது முகில்களாக கூழ்நிலையில் காணப்படும். முகிற்துளிகள் ஒன்றையொன்று இணைந்து பாரமானதான பெரிய திரண்மழை முகில்களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பாரமான திரண்மழை முகில்களே பூமியை நோக்கி படிவுவீழ்ச்சியாக வீழ்கின்றது. படிவுவீழ்ச்சி என்று கூறும்போது , மழைவீழ்ச்சி, தூறல், மழைப்பனி, பனிகலந்தமழை, ஆலி, உறைபனி எனப் பல்வேறு வடிவங்களில் நிலத்தை அடைகின்றது.

4. கழுவுநீரோட்டம் - பல்வேறு படிவுவீழ்ச்சி வடிவங்களாக புவிமேற்பரப்பை வந்தடைந்த நீரானது, சமுத்திரத்தை  சென்றடைகின்ற செயற்பாடு கழுவு நீரோட்டம் எனப்படுகின்றது. அதாவது நிலத்தின் மேல் நதிகளிற்கூடாகவோ அல்லது தரைக்கீழான நகர்வின் மூலமோ அது சமுத்திரத்தை அடைகின்றது. இதன் மூலம் ஏற்கனவே நிலமேற்பரப்பிலிருந்து ஆவியாக்கப்பட்ட நீரிலும் பார்க்க அதிகமாகக் கிடைத்த நீரானது சமுத்திரத்தை அடைந்து சமநிலையை பேணுகின்றது. இதனை கீழேயுள்ள நீர்ச்சமநிலையை விளக்கும் படத்திலிருந்து அறிந்து கொள்ளமுடியும்.
[Article By :- Akshayan BA (Hons) special in Geography]