சூழல் தொகுதி

குறித்த ஒரு பிரதேசத்தில் இருக்கும் எல்லா அங்கிகளும், அந்த அங்கிகளுடன் இடைத்தாக்கங்களைக் காட்டும் அப்பிரதேசத்தில் அமைந்த உயிரில்லாத சூழலும் உள்ளடங்கிய செயற்பாட்டுப் பிரிவு அப்பிரதேசத்தின் சூழற் தொகுதி எனப்படும். நீர் அல்லது புவிச்சூழற் தொகுதிக்கு சக்தி சூரியனிலிருந்து மாத்திரமே கிடைக்கின்றது.


•             இயற்கைச் சூழற் தொகுதி:- காடு, புதர், புல்நிலம்
•             நீர்ப்பரப்பு சூழற் தொகுதி:- சமுத்திரங்கள், உள்நாட்டுக் கடல்கள்
•             ஈரநிலச் சூழற் தொகுதி:- ஆறு, ஏரி, குளம், முருகைக் கற்பாறை, கடற்கரை தாவரம், சேற்று நிலங்கள்.
•             மானிட சூழற்றொகுதி:- மீள்நடப்பட்ட காடு, பயிர்நிலம், வீட்டுத் தோட்டம், நெல் வயல்கள், மீன் தொட்டிகள்

1)            சூழற்தொகுதி ஒன்றின் பிரதான கூறுகள்:-

•             தன்மை அடிப்படையில் பலதரப்பட்ட பரந்த சூழல் தொகுதிகள் காணப்பட்ட போதிலும் அவை பொதுவான ஒரு அமைப்பினாலும் தொழிற்பாட்டினாலும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான சூழலியல் தொடர்புகள் இரு பிரதான கூறுகளை உள்ளடக்கியுள்ளன.
            1. உயிரற்ற கூறுகள்       2. உயிருள்ள கூறுகள்.


2)            உயிரற்ற கூறுகள்:-
சூழல் தொகுதிகளின் நிலைபெறுகையில் உயிரற்ற காரணிகள் முக்கிய பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. மண், ஒளி, வெப்பம், ஈரப்பதன், காற்று போன்றவை பிரதான உயிரற்றகாரணிகளாகும்.
•             மண் - மண் என்பது சேதன அசேதன பதார்த்தங்களின் கலவையாகும். அது விலங்ககள், தாவர வளர்ச்சிக்கான ஊடகமாகத் தொழிற்படுகின்றது. மண்ணில் பிரதானமாக சேதனப்பொருட்கள், கனிப்பொருட்கள், மண்வளி, மண்நீர் மதலிய உயிரிலிக் காரணிகள் காணப்படுகின்றன. தாவரங்களின் வேர்களின் மூலம் மண்ணில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் தாவரங்களுக்குத் தேவையான நீர் கனியுப்பு என்பன மண்ணிலிருந்து பெறப்படும். மண் வாழ் விலங்குகள், தாவரங்கள், நுண்ணங்கிகள் போன்றவற்றுக்கு ஆதாரமாக மண் காணப்படுகின்றது.
•             ஒளி உயிர்க்கோளத்திற்கான உணவுத் தொகுப்பின் பொருட்டு பச்சைத் தாவரங்களுக்கு வேண்டிய சக்தி மூலமாக சூரிய ஓளி காணப்படுகின்றது. ஒளிச்செறிவு, ஒளியின் நிறங்கள், ஒளிக்காலம் என்பவற்றுக்கு இணங்க ஒளித்தொகுப்பின் அளவு நிர்ணயிக்கப்படும். கிடைக்கும் ஒளிச்செறிவின் அளவிற்கேற்ப அங்கிகள் தமது நடத்தைக் கோலத்தை மாற்றிக்கொள்ளும். தாவரங்களில் இலையுதிர்தல், வளர்ச்சி, பூத்தல் ஆகியன இத்தகைய மாற்றங்கள் ஆகும்.
•             வெப்பம் -  சூழற்தொகுதியின் வெப்பநிலையில் பிரதான பாதிப்பை ஏற்படுத்தும் வெப்பமூலம் சூரியனாகும். ஒரு குறித்த வெப்பநிலை வீச்சினுள்ளே உயிரிகளின் அனுசேபத் தொழிற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றது. வெப்பநிலை குறைவடையும்போது நொதியங்களின் செயற்பாடகள் குறைவடையும். வெப்பநிலை அதிகரிக்கும்போது புரதங்கள் போன்ற உயிர் இரசாயணப் பதார்த்தங்கள் பாதிக்கப்படுவதனாலும் உயிரிகள் பாதிக்கப்படும்.
•             ஈரப்பதன் - உயிரினங்களின் நிலைபெறுகையின் பொருட்டு வேண்டப்படும் இன்றியமையாத காரணிகளுள் தரைச்சூழல்களில் பெரிதும் வரையறுக்கப்பட்ட காரணி ஈரப்பதனாகும். மண்ணுக்குப் நீர் கிடைக்கும் பிரதான மார்க்கமாக அமைவது மழையாகும். தரைத்தாவரங்கள் தமக்கு வெண்டிய நீரை மண்ணலிருந்து பெற்றுக்கொள்கின்றன. நீர்ப்பற்றாக்குறை நிகழும் பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் நீரைப் பெற்றுக்கொள்வதற்கும் காப்புச்செய்வதற்கும் இசைவாக்கங்களைக் காண்பிக்கும். மழைவீழ்ச்சி குறைவடைந்து ஆவியாதல் அதிகரிப்பதனால் மண்ணின் உவர்த்தன்மை அதிகரிக்கும். இது மண்வாழ் உயிரினங்கள் நீரை அகத்துறிஞ்சலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
•             வளி உயிர்க்கோளத்திற்குரிய பிரதான கூறுகளில் ஒன்றாக வளி காணப்படுகின்றது. தாவரங்களின் ஒளித்தொகுப்பிற்கு வேண்டிய காபனீரொட்சைட்டு மற்றும் சுவாசத்திற்கு வேண்டிய ஒட்சிசன் என்பவற்றை வழங்குகின்ற மூலமாக வளி காணப்படுகின்றது. ஆவியாதலின் மூலம் உருவாகிய நீராவி வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கும் மழை உருவாகுதன் பொருட்டும் காற்றோட்டங்கள் காரணமாகின்றன. மேலும் வித்துக்களும், பழங்களும் பரவுவதற்கான காரணியாகவும் காற்றுக்கள் காணப்படுகின்றன.

3)            உயிருள்ள கூறுகள்(உயிரினச் சூழலின் பிரதான கூறுகள்):-

தாவரங்கள், விலங்குகள், நுண்ணங்கிகள் என்பனவே சூழல் தொகுதியின் உயிரினக் கூறுகளாகும். இந்த உயிரினக் கூறுகளில் 3 முக்கிய அம்சங்கள் உள்ளன.
 1. உற்பத்தியாக்கிகள்  2. நுகரிகள்          3. பிரிகையாளர்கள்


•             உற்பத்தியாக்கி:-
உற்பத்தியாக்கிகள் தற்போசனிகளாகும். அவை தமக்கு வேண்டிய பதார்த்தங்களை தாமாகவே தொகுத்துக் கொள்கின்றன. நுகரிகளின் வாழ்விற்காக பச்சைத் தாவரங்கள் ஒளித்தொகுப்பின் மூலம் (பச்சையத் தொழிற்பாடு) உணவினைத் தயாரிக்கின்றன. உற்பத்தியாக்கியினால் ஏற்படுத்தப்படும் ஒளித்தொகுப்பு மூலமான இரசாயண மாற்றத்தினால் ஏற்படும் காபனீரொட்சைட்டின் உற்பத்தி சக்தியாக மாற்றப்படுகின்றது.  இவற்றின் உற்பத்திக்கான வளங்களாக சக்தி, போசனை என்பன காணப்படுகின்றன. இது சூரியனிலிருந்தும் மண்ணிலிருந்தும் பெறப்படுகின்றது. இவை ஒளித்தொகுப்பின் மூலம் தேவையான சக்தியை பிரயோகித்து உற்பத்தியை பெருக்கிக் கொள்கின்றன. இதனை நுகரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாவரங்களிலிருந்தே தமக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.

•             நுகரிகள்:-
உற்பத்தியாக்கிகளின்பால் மறைமுகமாக அல்லது நேரடியாக தங்கியுள்ள சகல விலங்ககளும் நுகரிகள் ஆகும். அதாவது உற்பத்தியாளரை அல்லது தாவரங்களை உண்ணும் விலங்குகள், தாவர உண்ணிகளை உண்ணும் விலங்குண்ணிகள், அத்துடன் தாவரங்களையும் விலங்குகளையும் உண்ணும் அணைத்துமுண்ணிகள் ஆகியன நுகரிகளாக அழைக்கப்படுகின்றன. முதநிலை நுகரிகள்(தாவர உண்ணி) சக்திப் பரிமாற்றம் நிகழும்போது நேரடியாக சக்தியை உற்பத்தியாளரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன. ஊணுண்ணிகளான இரண்டாம்படி நுகரிகள் தாவர உண்ணிகளினூடாக மறைமுகமாக உற்பத்தியாளரிடமிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன.

•             பிரிகையாக்கி:-
இறந்த உயிரிகளின் உடல்கள் மற்றும் கழிவுகள் மீதிகள் என்பவற்றில் தங்கியுள்ள உயிரிகள் பிரிகையாக்கிகள் எனப்படும்.  இறந்த தாவரங்களும், விலங்குகளும், ஜீரணித்தலாலும், மீள்சுழற்சியினாலும் சிறு மூலக்கூறுகளாகின்றன. இவ்வாறு தாவரங்கள்  பிரிகையடைந்து சிறிய மூலக்கூறுகளாவதற்கு பக்ரீரியா, பங்கசு, பூச்சிக்கள், புழுக்கள் முதலிய பிரிகையாக்கிகள் துணைபுரிகின்றன. இச்செயற்பாடகள் மூலம் கனிமசேதன மூலங்கள் வளமாக்கப்பட மீண்டும் உற்பத்தியாக்கியினால் பயன்படுத்தப்படுகின்றது.


4)            உயிருள்ள கூறுகளும், உயிரற்ற கூறுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புறும் விதம்:-  
•             புவி மீது வாழும் எல்லா அங்கிகளும் அவற்றுடன் இடைத்தாக்கம் புரியும் உயிரில்லாத சூழலும் சேர்ந்து அமைக்கும் மிகப்பெரிய செயற்பாட்டுத் தொகுதி உயிரின மண்டலம் எனப்படும். புவிக் கோளில் உயிர் உள்ள பகுதி உயிரினமண்டலம் ஆகும். முழுப் புவியிலும் தனி உயிரின மண்டலமே இருக்கின்றது. புவி மீது உள்ள எல்லாச் சூழற் தொகுதிகளும் அதில் அடங்கும்.

•             புவிமீது வாழும் தாவரங்கள், விலங்குகள், நுண்ணங்கிகள் ஆகிய யாவும் உயிரின மண்டலத்தின் உயிர்க் கூறுகளாகும். இங்கே வளிமண்டலமும் புவியின் மேற்பரப்புப் படையும் அங்கிகளுடன் பொருள்கள் பரிமாறிக் கொள்ளப்படும் ஆழம் வரைக்குமுள்ள மண்படையும் உயிரற்ற சூழலைச் சேர்ந்தனவாகும்.

•             புறத்தேயிருந்து வளிமண்டலத்திற்கு மின்காந்த அலைகளாகச் சூரியனிலிருந்து வரும் ஒளிச் சக்தி மாத்திரம் கிடைக்கின்றது. உயிரின மண்டலத்திலிருந்து புறத்தே பாய்ந்து செல்வது சக்தி மாத்திரமேயாகும். அது புவியிலிருந்து வெளியேறும் வெப்ப சக்தியாகும். ஒரு உயிரினத் தொகுதியில் உயிருள்ள கூறுகளுக்கும், உயிரற்ற கூறுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி நாம் கீழேயுள்ள விளக்கப்படத்தினை ஆதாரமாகக் கொண்டு நோக்குவோம்.

•             சூரியன் உற்பத்தியாக்கியான தாவரத்திற்கு ஒளி வழங்;குவதுடன் வளியிலுள்ள காபனீரொட்சைட் உம் ஒளித்தொகுப்பிற்கு உதவுகின்றது. அத்துடன் தாவரங்களின் வளர்ச்சிக்கு நீரும் மண்ணும் பெரும் உதவி புரிகின்றன. இவை அனைத்தும் உயிரற்ற கூறுகளாகும் இவை உயிருள்ள தாவரங்களுடன் நேரடியாக தொடர்பு படுகின்றன.
               
•             விலங்குகளின் வளர்ச்சியில் நீர்வளியிலுள்ள ஒட்சிசன் மற்றும் உயிர்வாழ்க்கை நிலவுவதற்கு மண்ணும் துணை புரிகின்றன. மேலும் தாவர விலங்குகள் இறந்து அவை மீண்டும் தாவர போசனைகளாக மண்ணில் உக்கலாக மாறுவதற்கு பிரிகையாளர்கள் உதவுவதுடன் பிரிகையாளர்களுக்கு இச்செயற்பாட்டை புரிவதற்கு மண், நீர் ஆகியன துணை புரிகின்றன.





5)            உணவுச் சங்கிலி :-

•             ஓர் உயிரினத் தொகுதியினுள் இடம்பெறுகின்ற சக்தி ஓட்டமானது உணவுச்சங்கிலயின் மூலம் எடுத்து விளக்கப்படுகின்றது. சூழற் தொகுதியின் முதன்மை உற்பத்தியாக்கி மட்டத்திலிருந்து அங்கிகளின் தொடர்வழியாகச் சக்தி பாய்ந்து செல்வதைக் காட்டும் போசனைத் தொடர்புடைமைகளின் ஒழுங்கு முறையானது உணவுச் சங்கிலி எனப்படும்.

•             பெரும்பாலான உணவுச் சங்கிலிகள் முதல் இணைப்பாகப் பச்சை நிறத் தாவரம் அமைகின்றது. அடுத்துள்ள இணைப்புக்கள் முறையே தாவர உண்ணிகளும், ஊணுண்ணிகளுமாகும். இதற்கேற்ப உணவுச் சங்கிலி குறைந்த பட்சம் மூன்று இணைப்புக்களையேனும் கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகும்.

•             உணவுச் சங்கிலி வழியாக ஒரு போசனை மட்டத்திலிருந்து அடுத்த போசனை மட்டத்திற்குச் சக்தி பாய்ந்து செல்லும்போது ஒவ்வொரு படிமுறையிலும் அதிக அளவு சக்தி இழக்கப்படுகின்றமையால் உணவுச் சங்கிலி ஒன்றின் ஆகவுங் கூடிய இணைப்புக்களின் எண்ணிக்கை பெரும்பாலும் நாலாக அல்லது ஐந்தாக வரையறுக்கப்பட்டிருக்கும்.

•             சூழற் தொகுதியில் முக்கியமாக இருவகை உணவுச் சங்கிலிகள் காணப்படும்.
1.            மேயும் உணவுச் சங்கிலி               
2.            குப்பை உணவுச் சங்கிலி

•             மேயும் உணவுச் சங்கிலியில் முதல் இணைப்பு பெரும்பாலும் பச்சை நிறத்தாவரமாகவே இருக்கும். உதாரணம்;
i.              புல் - மான் - சிறுத்தை (காட்டு சூழற் தொகுதி)
ii.             இலை மயிர் கொட்டிகுடம்பி உண்ணும் பறவை (தோட்டச் சூழற் தொகுதி)

•             குப்பை உணவுச் சங்கிலியில் முதல் இணைப்பு உக்கும் அங்கிப் பகுதிகளாகும். அதாவது குப்பையாகும். உதாரணம்
i.              குப்பை/ அழுகல் - இறால் - மனிதன்
ii.             சேதன ஊடகம் - காளான் - மனிதன்

•             இவ்விரு முக்கிய வகையைத் தவிர ஒட்டுண்ணிக்குரிய உணவுச் சங்கிலியையும் நாம் கூறலாம்.  உதாரணம் :- ரோஜா செடி சாறு உறிஞ்சும் பூச்சி- பக்ரீரியா விழுங்கி வைரசு.


 

6)            உணவுச் சங்கிலி ஒன்றில் ஒரு தொடுப்பு அழிந்து போகும்போது அவ் உயிரினத் தொகுதியில் ஏற்படக் கூடிய மாற்றங்கள்:-

•             உற்பத்தியாக்கி அழிவடைதல்:-
             உற்பத்தியாக்கியில் தங்கியுள்ள தாவர உண்ணிகள் அழியும்.
             தாவர உண்ணியில் தங்கியுள்ள விலங்குண்ணிகள் அழியும்.
             தாவர விலங்குகளில் தங்கியுள்ள அணைத்துமுண்ணி அழியும்.
             மேற்குறிப்பிட்வை அழிவதால் பிரிகையாக்கிகள் அழியும்.
             எனவே சூழற்றொகுதி அமைப்பழிவுறும் அத்துடன் சூழற் சமநிலை குழம்பும்.
•             தாவர உண்ணி அழிவடைதல்:-
             உற்பத்தியாக்கிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
             தாவர உண்ணியில் தங்கியுள்ள ஊணுண்ணிகள் அழியும்.
             தாவர விலங்குகளில் தங்கியுள்ள அணைத்துமுண்ணி அழியும்.
             மேற்குறிப்பிட்வை அழிவதால் பிரிகையாக்கிகள் அழியும்.
             எனவே சூழற்றொகுதி அமைப்பழிவுறும் அத்துடன் சூழற் சமநிலை குழம்பும்.
•             ஊணுண்ணி அழிவடைதல்:-
             தாவர உண்ணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கம்.
             உற்பத்தியாக்கிகளின் எண்ணிக்கை குறைவடையும்.
             தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைவடையும்.
             அணைத்து முண்ணிகளின் எண்ணிக்கை குறைவடையும்.
             மேற்குறிப்பிட்வை அழிவதால் பிரிகையாக்கிகள் அழியும்.
             எனவே சூழற்றொகுதி அமைப்பழிவுறும் அத்துடன் சூழற் சமநிலை குழம்பும்.
•             பிரிகையாக்கிகள் அழிவடைதல்:-
             கனிப்பொருள், காபண், நைதரசன் வட்டம் என்பன குழப்பமடையும்.
             உற்பத்தியாக்கி, தாவர உண்ணி, ஊணுண்ணி, அனைத்துமுண்ணி என்பவற்றின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட சூழற்றொகுதி அமைப்பு அழிவுறும்.



7)            உணவு வலை:-
சூழற்தொகுதியில் இருக்கும் உணவுச் சங்கிலிகள் அவற்றின் பல்வேறு போசனை மட்;டங்களிலே ஒன்றோடொன்று இடைத்தாக்கம் புரிகின்றமையால் உண்டாகும் போசனைத் தொடர்புடைமைகள் உணவுவலை எனப்படும். உணவு வலையில் ஒரு விலங்கு இனத்தினால் வேறு அங்கி இனங்கள் பல உணவாகக் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான விலங்கு இனங்கள் போசனை மட்;டங்கள் பலவற்றில் தங்கியுள்ளன. குறிப்பாக பாம்பு இனங்களை உதாரணமாகக் கொள்ளலாம். பாம்பினங்கள் பெரும்பாலும், இரண்டாம் போசனை மட்டத்தைச் சேர்ந்த எலிகள் மீதும், மூன்றாம் போசனை மட்டத்தைச் சேர்ந்த தேரைகளின் மீதும் தங்கியிருக்கின்றன. பெரும்பாலான விலங்கு இனங்கள் இவ்வாறு பல போசனை மட்டங்களிலே தங்கியிருக்கின்றமையினால் உணவுச் சங்கிலிகள் ஒன்றோடொன்று இணைந்து உணவுவலையை உருவாக்குகின்றன.

 


8)            சூழற் தொகுதியின் சக்திப்பாய்ச்சல்:-

•             சூழற் தொகுதியினுள்ளே நடைபெறும் எல்லாச் செயற்பாடுகளுக்கும் சக்தி அவசியம். சூழற்றொகுதிக்கு சூரியனிலிருந்தே அனேகமாக எல்லாச் சக்தியும் கிடைக்கின்றது. அச்சக்தி ஒளியாகக் கிடைக்கின்றது. இவ்வொளிச் சக்தியில் ஒருபகுதி தாவரங்களினால் ஒளித்தொகுப்பிற்காகப் பயன்படுத்தப் படுகின்றது. தாவரங்களின் மீது படும் ஒளியில் 50 சதவீதம் மாத்திரமே பெரும்பாலும் ஒளித்தொகுப்பின் மூலம் நாட்டப்படுகின்றது. அத்தோடு, சிற்சில இரசாயனப் பொருட்கள் நகர்வுற்று விழுவதன் மூலமும் மிகச் சிறிய அளவில் சக்தி சூழற் தொகுதிகளுக்கு கிடைக்கின்றது.
•             தாவரங்களின் மூலம் நாட்டப்படும் சக்தி சூழற் தொகுதியின் பல்வேறு போசனை மட்டங்களின் வழியாகச் சக்கரமல்லாத முறையில் பாய்ந்து செல்கின்றது. இவ்வாறு சக்தி பாய்ந்து செல்லும்போது பெரும்பாலும் எந்த ஒரு போசனை மட்டத்திற்கும் அதற்குக் கீழே உள்ள போசனை மட்டத்தில் இருந்த சக்தியில் 10 சதவீதம் அளவு சக்தியே கிடைக்கின்றது. இச்சக்திப் பரிமாற்றம் 10 சதவீத சக்தி பரிமாற்றவிதி முறையில் ஏற்படுகின்றன.  இதனால் இது 10 சதவீத சக்திபரிமாற்ற விதி எனப்படுகின்றது. ஒட்டு மொத்தமாகக் கருதப்படும் சூழற் தொகுதிக்கு ஒளியாகக் கிடைக்கும் சக்தியின் அளவும் சூழற் தொகுதியிலிருந்து வெப்பமாக வெளியேறிச் செல்லும் சக்தியின் அளவும் சமமாகும்.


Article By :- Akshayan